காசாவில் இருந்து பணயக்கைதிகள் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து இஸ்ரேலிய அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சூழலில் காசாவில் 332 ஆவது நாளாகவும் இஸ்ரேல் நேற்று (02) சரமாரி தாக்குதல்களை நடத்தியதோடு மேற்குக் கரையின் ஜெனின் நகரில் ஆறாவது நாளாக இஸ்ரேலின் முற்றுகை நீடித்தது.
காசாவில் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான உடன்படிக்கை ஒன்றை உடன் செய்து கொள்வதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே நேற்று இஸ்ரேலில் தேசிய அளவில் வேலைநிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது
டெல் அவிவில் உள்ள பரபரப்பான பென்கூரியன் விமானநிலையத்தில் விமான போக்குவரத்துகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதோடு, ரயில் மற்றும் ஏனைய போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தெற்கு காசாவில் சுரங்கப்பாதை ஒன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை ஆறு இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை இஸ்ரேலியப் படை அணுகுவதற்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.