இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதிக்காண் போட்டியில் சென்னை சுப்பர்கிங்ஸ் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர்கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சென்னை அணி சார்பில் துடுப்பாட்டத்தில், ருத்ராஜ் கெய்க்வாட் 60 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். இந்தநிலையில், 173 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
குஜராத் அணி சார்பில் சுப்மன் கில் 42 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பில் பந்துவீச்சில், தீபக் சஹர், மகீஸ் தீக்ஸன, ரவிந்திர ஜடேஜா, மதீஸ பத்திரன ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை சென்னை சுப்பர்கிங்ஸ் அணி 10 ஆவது தடவையாகவும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.இதேவேளை, இன்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னொவ் சுப்பர் ஜயன்ஸ் ஆகிய அணிகள் போட்டியில் மோதவுள்ளன. இந்த போட்டி இலங்கை நேரப்படி, இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.