36 கோடி ரூபா பெறுமதியான ஹஷீஸ் போதைப் பொருளுடன் கனடா நாட்டு 36 வயது பெண்ணை சுங்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கனடா டொரண்டோ நகரிலிருந்து பயணத்தை ஆரம்பித்து அபுதாபிக்கு வந்து அங்கிருந்து எடிஹாட் விமான சேவையின் ஈ.வை. -936 இலக்க விமானத்தில் 15ம் திகதி இரவு 8.30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலைய சுங்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கு இணங்க அப்பெண் வருகை தந்த விமானத்திற்கு நேரடியாகச் சென்று குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
அப் பெண் கொண்டுவந்த இரண்டு பயனப்பொதிகளில் சில கட்டில் விரிப்புக்குள் வைத்திருந்த போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. 36 கிலோ கிராம் 500 கிராம் நிறையுடைய ஹஷீஸ் போதைப் பொருள் அங்கு இருந்துள்ளது. அவை பொலிதீனினால் 12 பொதிகள் செய்யப்பட்டு காபன் பேப்பரில் சுற்றி ஒரு பொதியில் 6 வீதம் 72 பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த ஹஷீஸ் போதைப் பொருள் பெரும்பாலும் இன்னொரு நாட்டிற்கு கொண்டு செல்வதற்காக இங்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.