மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்திற்கருகில் இன்று காலை (16) இடம்பெற்ற வீதி விபத்து சம்பவத்தில் 43 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான இஸ்லாமிய மார்க்க அறிஞரான முற்றிலும் விழிப்புலனற்ற மௌலவி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை நோக்கி சென்று கொண்டிருந்த மட்டக்களப்பு டிப்போவுக்கு சொந்தமான இ.போ.ச பஸ் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் மோதுண்டு போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது குறித்த நபரை ஏற்றி வந்த மற்றொரு மௌலவியான நபரும் படுகாயம் அடைந்து நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
முற்றிலும் கண்பார்வையற்ற நபரான மேற்படி மௌலவி புனித அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழுமாவார். காத்தான்குடி மொகைதீன் தைக்கா பள்ளிவாசலில் பிரதம இமாமாக கடமையாற்றி வரும் இவர் இன்று காலை தொழுகையை நிறைவேற்றிவிட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்வையிடுவதற்காக காயமடைந்த மௌலவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்தபோதே கல்லடி பாலத்திற்கு அருகில் லேடி மேனிங் ட்ரைவ் சந்தியில் மேற்படி விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது
நவகிரியிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வந்து கொண்டிருந்த பஸ் மேலே குறித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பஸ் சாரதி மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் குறித்த நபரின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.