நுவரெலியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் ஒன்று மீட்பு

நுவரெலியாவில் அரச வாகனமொன்று மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வாகனம் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உடன் பிறந்த சகோதரர் வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் நேற்று (12) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்படும் வாகனங்கள் ஏதேனும் ஒரு இடத்தில் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ மறைத்து வைக்கப்பட்டு பாழடைந்த நிலையில் விடப்பட்டால் அது தொடர்பில் தெரிவிக்க பொதுமக்களிடம் கோரிக்கை வழங்கப்பட்டது. இதற்கமைய நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த வாகனம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தை பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட போது இலக்கத் தகடுகள் இன்றியும், வாகனம் பதிவு மற்றும் உரிமையாளர்கள் தொடர்பின் எவ்வித ஆவணங்களும் இல்லை எனவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும் இவ்வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் உடனடியாக பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படும் என வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்ததாகவும் தற்போது நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் பாதுகாப்பில் வாகனம் வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்வம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version