இலங்கைக்கு தோல்வி – உலகக்கிண்ணத்துக்கான நேரடி வாய்ப்பு பறிபோனது

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு மீண்டும் ஒருமுறை துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றம் கொடுக்க தொடங்கினர். டில்ஷான் மதுசங்கவுக்கு பதிலாக தனன்ஜய டி சில்வா அணிக்குள் நுழைந்தபோதும் துடுப்பாட்டத்தில் நினைத்த அளவில் பங்களிப்பை வழங்கவில்லை.

ஆரம்பத்தில் பெதும் நிஸ்ஸங்க மாத்திரம் நேர்த்தியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த ஏனைய முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். மெண்டிஸ் மற்றும் மெதிவ்ஸ் ஆகியோர் ஓட்டங்களின்றி வெளியேற, நுவனிது பெர்னாண்டோ 2 ஓட்டங்கள் மற்றும் சரித் அசலங்க 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதனைத்தொடர்ந்து தனன்ஜய டி சில்வா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பெதும் நிஸ்ஸங்க தசுன் ஷானகவுடன் இணைந்து தன்னுடைய அரைச்சதத்தை கடந்தார். நிஸ்ஸங்க 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற தசுன் ஷானக மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் ஓரளவு ஓட்டங்களை பெற்றுத்தந்தனர்.

தசுன் ஷானக 31 ஓட்டங்களையும், சாமிக்க கருணாரத்ன 24 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுத்தந்த நிலையில், ஏனைய பின்வரிசை வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினர். எனவே, 41.3 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 157 ஓட்டங்களுக்கு தங்களுடைய சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் மெட் ஹென்ரி, ஹென்ரி சிப்லி மற்றும் டெரைல் மிச்சல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

முதல் போட்டியில் 76 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி மீண்டும் ஒருமுறை மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.

குறைந்த ஓட்டங்கள் என்றாலும் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் நியூசிலாந்து அணிக்கு சவால் கொடுக்க தொடங்கினர். லஹிரு குமார தன்னுடைய முதல் ஓவரில் சாட் போவ்ஸ் மற்றும் டொம் பிளண்டல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த ஆரம்பத்தை பெற்றுத்தந்தார். தொடர்ந்து ராஜித மற்றும் ஷானக ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி முறையே டெரைல் மிச்சல் மற்றும் டொம் லேத்தம் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினர்

ஒரு கட்டத்தில் 59 ஓட்டங்களுக்கு நியூசிலாந்து அணியின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தாலும், வில் யங் மற்றும் ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியோர் 5வது விக்கெட்டுக்காக 98 ஓட்டங்களை பகிர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.

இறுதிவரை இவர்கள் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடியதுடன் வில் யங் 86 ஓட்டங்களையும், ஹென்ரி நிக்கோல்ஸ் 44 பெற்றுக்கொடுக்க 32.5 ஓவர்கள் நிறைவில் 159 ஓட்டங்களை பெற்று நியூசிலாந்து அணி வெற்றியை பதிவுசெய்தது.

இதேவேளை இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இலங்கை அணி ஐசிசி உலகக்கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளதுடன், சிம்பாப்வேயில் நடைபெறவுள்ள குவாலிபையர் போட்டியில் விளையாடி உலகக்கிண்ணத்துக்கான வாய்ப்பை தக்கவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version