இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரால் வீடுகள் மக்களிடம் கையளிப்பு

இந்திய உதவியில் முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்புத் திட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 106 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

நாட்டிற்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் நேற்று (20) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

இந்திய நிதியுதவியின் கீழ் நாட்டில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களின் கீழ் , கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட 106 வீடுகள் இதன்போது மெய்நிகர் வழியாக மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இதற்கு மேலதிகமாக 6 மில்லியன் டொலர் நிதியுதவியின் கீழ் அருகம்பேயில் நிர்மாணிக்கப்பட்ட கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையமும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது.

நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் நேற்று மாலை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்.

பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு இந்த சந்திப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியையும் சந்தித்து கலந்துரையாடினார்.

Exit mobile version