BREAKING

விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது தென் ஆபிரிக்கா

கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐசிசி இருபது 20 மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்து இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா, உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக இறுதி ஆட்டத்தில் விளையாட தகுதிபெற்று  வரலாறு படைத்தது.

இருபாலாருக்கும் நடத்தப்படும் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்கா விளையாட தகுதிபெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என சகலதுறைகளிலும் பிரகாசித்த தென் ஆபிரிக்கா, இந்த வெற்றி மூலம் இங்கிலாந்தின் வெற்றி அலைக்கு முடிவு கட்டி அவ்வணியை உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து வெளியேற்றியது.

லோரா வுல்வார்ட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களும் அயபொங்கா காகா, ஷப்மின் இஸ்மாயில் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் தென் ஆபிரிக்காவை வெற்றியுடன் கூடிய வரலாறுபடைக்க உதவினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைக் குவித்தது.

லோரா வுல்வார்ட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகிய இருவரும் 90 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

முதலாவதாக ஆட்டம் இழந்த லோரா வுல்வார்ட் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 53 ஓட்டங்களையும் அடுத்து ஆட்டம் இழந்த தஸ்மின் பிறிட்ஸ் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களையும் குவித்தனர்.

மாரிஸ்ஆன் கெப் 13 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களைப் பெற்றார்.

 

இங்கிலாந்து பந்துவீச்சில் சொஃபி எக்லஸ்டோன் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

165 ஓட்டங்கள் என்ற எட்டக்கூடிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று 6 ஓட்டங்களால் இறுதி ஆட்ட வாய்ப்பை தவறவிட்டது.

அதிரடி வேகத்தில் ஓட்டங்களைக் குவித்த டெனி வியட், சொஃபியா டன்க்லி ஆகிய இருவரும் 31 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அதே மொத்த எண்ணிக்கையில் சொஃபியா டன்க்லி 28 ஓட்டங்களுடனும் அலிஸ் கெப்சி ஓட்டம் பெறாமலும் ஆட்டமிழந்தனர்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த டெனி வியட் 11ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 85 ஓட்டங்களாக இருந்தபோது 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து நெட் சிவர்-ப்றன்ட், அணித் தலைவி ஹீதர் நைட் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஆனால் நெட் சிவர்-ப்றன்ட் 34 பந்தகளில் 5 பவுண்டறிகளுடன் 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததும் மேலும் 3 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. கடைசி ஓவரில் ஹீதர் நைட் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும் தென் ஆபிரிக்கா வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் அயாபொங்கா காகா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷப்னிம் இஸ்மாயில் 27 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவுக்கும் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இறுதிப் போட்டி கேப் டவுன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!