நாட்டின் சீரற்ற காலநிலை தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து இன்று (14) கலந்துரையாடல் மேற்கொண்டார்.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மாவட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குப் பணியை முதன்மைப்படுத்துமாறும், அதன் பின்னர், சேதமடைந்த சொத்துக்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதுடன், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஏற்கனவே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக, மேலும் பணம் தேவைப்படுமாயின் அதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் நிதி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி அறிவித்தார்.
மேலும், இவ்வருடத்தில் இதற்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தின் போது சேதமடைந்த சொத்துக்கள் புனரமைக்கப்படாத மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான இழப்பீடுகளை வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.